டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டருக்கே கிழிந்த நிலையில் கிடந்த ஆவணங்கள்!
சென்னை மணப்பாக்கத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டருக்கே கிழிந்த நிலையில் கிடந்த ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீடு, சூளைமேட்டில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகம், ராயப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள டான் பிக்சர்ஸ் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டருக்கே கிழிந்த நிலையில் கிடந்த ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் உரையாடல்கள் அடங்கிய காகிதங்கள் சாலையோரம் கிழித்து போடப்பட்டிருந்தன. மதுபான கொள்முதல், டெண்டர் போன்ற வார்த்தைகள் அந்த உரையாடலில் இடம்பெற்றிருந்தன. கிழிந்த நிலையில் இருந்த ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது.


