கோடநாடு வழக்கு - எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை நீதிமன்றத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2017 -ல் நடைபெற்ற கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் உயிரிழந்த நிலையில், சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஏராளமான சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்ற நீதிபதி, ‘எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரிக்க கூடாது?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை நீதிமன்றத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சம்பவம் நடந்த போது மாவட்ட எஸ்.பி.யாக இருந்த முரளி ரம்பா, இளவரசி, சுதாகரன், மாவட்ட ஆட்சியர் சங்கர், அதிமுக பிரமுகர் சஜிவனையும் விசாரிக்க அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


