செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக தொடர்வது ஏன்? - நீதிபதி சரமாரி கேள்வி!

 
Senthil Balaji

செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

senthil balaji

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, கடைநிலை ஊழியர் 48 மணிநேர சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே, சட்டம் அனைவருக்கும் சமம் தானே என கருத்து தெரிவித்தார்.