தனியார் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரை வெட்டிய நபரால் பரபரப்பு!
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் புகுந்து, வங்கி ஊழியரை வெட்டிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்த நிலையில், வங்கிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கு பணியாற்றி வந்த வங்கி ஊழியரின் காதை கத்தியால் வெட்டினார். இதனால் வங்கி ஊழியர் அலறி துடித்த நிலையில், வங்கி ஊழியர் காது வெட்டப்பட்ட நிலையில், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கிக்குள் வாடிக்கையாளர் போல நுழைந்த நபர் வங்கி ஊழியரின் காதை வெட்டிவிட்டு தப்ப முயன்றார். அவரை வங்கி ஊழியர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து மாம்பலம் காவல் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


