தூய்மை பணியாளர்கள் உடன் அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்ட மேயர் பிரியா

 
மேயர் பிரியா மேயர் பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகம் அம்மா மாளிகை அரங்கத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளர் மற்றும் மலேரியா பணியாளர்களைப் பாராட்டி நல உதவிகளை மேயர் பிரியா  வழங்கினார் இதில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் மற்றும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ வங்கி மூலம் பிரத்யேக அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தூய்மை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் வழங்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் நிதியுதவி 5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டால் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. இது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களும் பயன் பெறுவார்கள். இதற்காக மண்டல வாரியாக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை பதிவு செய்யாத தூய்மை பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். இன்று மண்டலங்கள் 4,5,6,7,8 ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், மலேரியா பணியாளர்களுக்கு இரண்டு சீருடை வழங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி முழுவதும் உள்ள 11,000 தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கபடும். வேஸ்ட் டு எனர்ஜி திட்டம் முதல்வரின் அறிவுறுத்தலின் படி கொண்டு வரபட்டு உள்ளது. பயோ மைனிங் ஆய்வு செய்ய ஐதாராபாத் சென்று இருந்தோம், ஏற்கனவே பயோ மைனிங் தொடர்ந்து பையோ சிஎன்ஜி திட்டம் விரைவில் நடைமுறைபடுத்தபடும், வேஸ்டு  டு  எனர்ஜி திட்டதின் மூன்று மாத பதிவுகள் கேட்டு நச்சு தன்மை கொண்ட வாயுக்கள் வெளிவராத பட்சத்தில் கொடுங்கையூரில் இந்த திட்டம் செயல்படுத்தபடும். மெரினாவில் 6 கோடி செலவில் நடைபெறும் நீலக்கொடி கடற்கரை விரைவில் செயல்பாட்டிற்கும் வரும்” என்றார்.

பின்னர் 5 மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதனை அவர்களுடன் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் அமர்ந்து சாப்பிட்டனர்.