வெளியூர் செல்லும் பயணிகளுக்காக... சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

 
metro

ஆயுத பூஜையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளன. அதற்கு மறுநாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியூர்களில் தங்கி மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விழைகின்றனர். பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், வெளியூர் செல்லும் பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

metro

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து இருப்பதுடன் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பயணம் செய்ய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.