தவெக போராட்டத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு ஏன்..? - காவல் ஆணையர் அருண் விளக்கம்
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம், இதுவரை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் தற்கொலை என்றே தெரிகிறது என சென்னை காவல் ஆணையர் அருண் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், “ரூ.40 கோடி கையாடல் வழக்கை கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து இருக்கக்கூடாது. எனவே தான் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனியை துணை ஆணையர் விசாரித்ததாக தகவல் இல்லை. புகார் அளித்தவர்களிடம்தான் ஆரம்பகட்ட விசாரணை நடந்துள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் இறப்பு, தற்கொலை என உறுதியாகியுள்ளது. விசாரணைக்கு பின், கொளத்தூர் துணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய குற்றப்பிரிவுக்கு முகாந்திரத்தோடு புகார் வந்தால் வழக்குப் பதியப்படும்.
தவெக போராட்டத்திற்கு எப்போதும் காவல்துறை அனுமதி மறுக்கப்படவில்லை. அனைத்து போராட்டங்களுக்கு பின்பற்றப்படும் விதிகளே தவெக போராட்டத்திற்கும் பொருந்தும். தவெகவினர் முன்னதாகவே நீதிமன்றம் சென்று விட்டனர்” எனக் கூறினார்.


