மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு...தனியார் பள்ளி மீண்டும் மூடல்!
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், சிலர் மயக்கமடைந்தனர். வாயுக்கசிவால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 10 நாட்களுக்கு பின் இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் 8 மாணவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை திருவொற்றியூரில் வாயு கசிந்த தனியார் பள்ளியில் வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு மேர்கொண்டார்.பள்ளிக்கு வந்த மாணவர்கள் 8 பேர் மயக்கம் அடைந்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாணவர்களை அழைப்பதற்காக வகுப்பறைக்கு சென்ற பெற்றோரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பள்ளி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.


