அதிமுக, தேமுதிகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியம்!

 
bjp

பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் இன்று தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பாமக மற்றும் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் தேமுதிகவையும், பாமகவையும் தங்களது பக்கம் இழுத்து மெகா கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் அதிகளவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். 

bjp

இந்த நிலையில், தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் இன்று தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், அதிமுக மற்றும் தேமுதிகவை சேர்ந்தவர்கள் வினோஜ் பி செல்வம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். குறிப்பாக துறைமுகம் தொகுதி அதிமுக மாணவரணி இணைச்செயலாளர் விஜய் அசோகம், துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாலர் அன்பழகன், இளைஞரணி செயலாளர் சந்திர மோகன் உள்ளிட்டோர் அதிமுகவினர் பாஜகவில் இணைந்தனர்.


இதேபோல் துறைமுகம் தேமுதிக இளைஞரணி துணை செயலாளர் விமல்ராஜ், கேப்டன் மன்ற பகுதி செயலாளர் விக்னேஷ், தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்.