"கல்யாணம் பண்ணிட்டு நீயெல்லாம் எதுக்கு காலேஜ் வரனு கேக்குறாரு"- தவறாக பேசும் பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் தர்ணா

 
[

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலிசார் தடுத்து நிறுத்தியதால் கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அரசியல் துறை பேராசிரியர் வரலாற்று துறை மாணவர்களிடம் தவறான வார்த்தைகளை கூறி வருவதாகவும், இதனால் மாணவர்களின் மனநிலையில் தவறான சித்தரிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், அவர்மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஒருவர், “கல்யாணம் பண்ணிட்டு நீயெல்லாம் எதுக்கு காலேஜ் வரனு பேராசிரியர் கேக்குறாரு.... கல்யாணம் ஆனவங்க படிக்கவே கூடாதா...?” என தனது ஆதங்கத்தை பதிவு செய்தார். 

இதனிடையே வரலாற்று துறை பேராசிரியர் திரிபுரசுந்தரி என்பவருக்கும், அரசியல் துறை பேராசிரியருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டப்படுவதாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இதேபோன்று வரலாற்று துறை பேராசிரியர் திரிபுரசுந்தரியை கண்டித்து அரசியல் துறை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி அறிவை ஏற்படுத்தாமல் போராட்ட உணர்வை திணித்து பேராசிரியர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே உள்ளனர். மாணவர்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவர்களை கலைத்து வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். போராட்டம் குறித்து கல்லூரி முதல்வர் கலைவாணி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.