சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொடிமரம் வைக்கக் கூடாது- தீட்சிதர்கள் எதிர்ப்பால் பதற்றம்

 
ச் ச்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ளே இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடி மரத்தை அகற்றும் பணிக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடிமரத்தை மாற்றி அமைக்கும் பணி இன்று நடைபெற இருந்தது. இதற்கு நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் டிரஸ்டிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தற்போது உள்ள கொடி மரத்தைப் போலவே நிறுவ வேண்டும் என்றும், மாற்றங்கள் செய்ய மாட்டோம் என எழுத்துப்பூர்வமான கடிதம் கேட்டனர்.

இந்நிலையில் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் கோயில் தீட்சிதர்கள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் டிரஸ்டிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஒரு மணி நேரம் கால அவகாசம் கேட்டனர். இந்நிலையில் கால அவகாசம் முடிந்ததும் மீண்டும் கோயில் கொடி மரத்தை அகற்றும் பணியை துவங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம் என கூறினார். ஆனால் போலீசார் பணிகள் தொடர்ந்து நடக்கட்டும். உத்தரவு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என கூறினர். இந்நிலையில் சில தீட்சிதர்கள் அங்கிருந்த இரும்பிலான தடுப்புகள் மூலம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் கொடிமரம் உள்ள வழியை தீட்சிதர்கள் சிலர் மூடினர். அப்போது தீட்சிதர்களுக்கும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவாதம் செய்த தீட்சிதர்கள்

பின்னர் சிறிது நேரத்தில் அவர்களாகவே தடுப்புகளை அகற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் கொடி மரம் தொடர்பான வழக்கு விசாரணை சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதன் முடிவை தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிடுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள், டிரஸ்டிகள் மற்றும்  போலீசார் கோயிலுக்கு உள்ளே காத்திருக்கின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது கோயில் கொடிமரம் தொடர்பாக தற்போது உள்ள நிலையே 15 தினங்களுக்கு தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோயிலை விட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் வெளியேறினர்.