ஆரணி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு..

 
stalin

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குட்டையில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரிக்குப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது  பார்வதி அகரம் கிராமம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்த  விநாயகம் என்பவரது மகள் ஹேமலதா,  மாரிமுத்து என்பவரது மகள் கோமதி ஆகிய இருவரும்,  அவர்களது பாட்டி மல்லிகாவுடன் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.   இந்நிலையில் நேற்று திருத்தணி பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத  கல்குவாரி ஒன்றில் மழைநீர் தேங்கியிருந்துள்ளது.  அப்பொழுது பாட்டி மல்லிகாவும்,  பேத்திகள்  இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.  

நீரில் மூழ்கி உயிரிழப்பு

அப்போது, சிறுமிகள் இருவரும் தேங்கிய குட்டை நீரில்  குளித்து கொண்டிருந்த  போது பாட்டி மல்லிகா கரையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.  எதிர்பாராத விதமாக சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.  இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மல்லிகா நீரில் இறங்கி பேத்திகளை காப்பாற்ற முயன்றுள்ளார்.    பாட்டி மல்லிகா மற்றும் பேத்திகள் ஹேமலதா,  கோமதி ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பார்வதிபுரம் கிராமத்தில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். அத்துடன்  உயிரிழந்த மூவருக்கும் தலா 2 இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.