“வேடிக்கை பார்க்க மாட்டோம்” - ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

 
mk stalin mk stalin


ஆளுநர்  சட்டப்பேரவைக்கு இடைஞ்சல் தர நினைத்தால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும்.  ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாதவராக இருக்க வேண்டும் என அம்பேத்கர் குறிப்பிட்டு இருக்கிறார்.

assembly

ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் . அரசியல் கட்சிக்கு அல்ல என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது.  பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

 ஆளுநர் ரவி

ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என நான் கூற மாட்டேன்; ஆனால், அவரது அரசியல் விஸ்வாசம், அரசியல் சட்ட விஸ்வாசத்தை விழுங்கிவிட்டது. அதனால்தான், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை கொள்கைகளை மீறி பொதுவெளியில் பேசுகிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில், ராஜ்பவனை அரசியல் பவனாக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றி வருகிறார்.  வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரது ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.  ஆளுநர் கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை. ஆனல் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர ஆளுநர் நினைத்தால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்."என்று கூறினார்.