644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 644 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை, மாநில கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணிகளில் தேர்வு செய்யப்பட்ட 644 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடையாளமாக 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார். இதை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 உதவி மருத்துவ அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திறன்மிகு உதவியாளர் நிலை-2 மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உளவியல் உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 மருந்துகள் ஆய்வாளர்கள், குடும்ப நல இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 54 வட்டார சுகாதார புள்ளியிலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 644 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


