NDRF வீரர் வெங்கடேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

 
stalin

ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய NDRF வீரர் வெங்கடேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

odisha

கடந்த 2ம் தேதி ஒடிசாவின் பாலச்சோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.  இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து , அருகில் இருந்த தண்டவாளங்களில் விழுந்தன.  அப்போது எதிர் திசையில் வந்த பெங்களூரு ஹௌரா விரைவு ரயில் பெட்டிகளில் மோதி தடம் புரண்டது.  இந்த விபத்தில் சுமார் 278 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  ஒட்டுமொத்தமாக நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியது எனலாம். இந்த சூழலில் இந்த விபத்து குறித்து முதன் முதலில் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்தவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர் வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது வாட்ஸ் அப் மூலம் விபத்து நடந்த படங்கள் இருப்பிடத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிய நிலையில், மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு  வந்துள்ளனர்.  இதன் மூலம்  பல உயிர்கள் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு வெங்கடேசனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "#OdishaTrainAccident-இல் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள். 

உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.