சாய் பல்லவிக்கு கலைமாமணி விருது : இன்று வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

 
1 1

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, அனிருத் உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா இன்று (அக்.11) சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளையும், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி பெயரிலான அகில இந்திய விருதுகளையும் வழங்க உள்ளார்.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் விருது (இயல்) விருது, முனைவர் ந. முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களுக்கும் இன்று வழங்கப்படவிருக்கிறது. பாலசரசுவதி விருது (நாட்டியம்) விருது, பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு வழங்கப்படுகிறது. அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடய விருதுகள், சிறந்த கலை நிறுவன விருது தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்), சிறந்த நாடகக் குழு விருது கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இன்று சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படவிருக்கிறது.