2ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 
ஸ்டாலின் உரை

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

பெண் கல்வியை போற்றும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு ஏதுவாகவும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், ‘புதுமைப் பெண்’திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அதன்படி இந்தத் திட்டத்தில்,  1,16,342 மாணவிகள்  பயனடைந்து வருகின்றனர்.  

மாணவிகள் (கோப்புப்படம்)

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின்  2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறும்  விழாவில் பங்கேற்ற முதல்வர், இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.  இதன்மூலம்  1,04,347 மாணவிகள் பயன்பெறுவர்.  பயனாளி மாணவிகள் 10 பேருக்கு  வங்கி பற்றட்டைகளை  வழங்கி முதல்வர் உரையாற்றி வருகிறார். 

புதுமைப் பெண் திட்டம்

இந்த விழாவில் அமைச்சர்கள் கீதா ஜீவன், சா.மு.நாசர், எம்.பிக்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர், சமூக நலத்துறை இயக்குநர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  உள்ளிட்ட  பலர் பங்கேற்றுள்ளனர்.   முதலமைச்சர் வருகையை ஒட்டி,  ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் பாஸ்கர் IPS  தலைமையில் ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி உள்ளிட்ட காவல் சரக உதவி ஆணையர்கள் உட்பட 9 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் 350 சிறப்பு காவலர்கள் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.