கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..

 
கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள்..  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..

கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஏப்ரல் 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.   இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  இதில் 2600 ஆண்டுகள் பழைமையாக  பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான தொல்பொருட்கள்  கிடைத்தன.  அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிபடுத்த  ரூ.18.42 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்து நேரில் பார்வையிட்டார்.
 

கீழடி
அதன்பின்னர் நாள்தோறும்  தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.  இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை இதுவரையில் அனைவரும் இலவசமாக பார்வையிட்டு சென்ற நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  

இந்த நிலையில், கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் திருவண்ணாமலை கீழநமண்டியில் அகழாய்வு பணிகளை வரும்  6-ம் தேதி (நாளை மறுநாள்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு  காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு  தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.