மோடியின் 'அந்த' குற்றச்சாட்டு - தமிழிசையை சப்போர்ட்டுக்கு இழுத்த ஸ்டாலின்
தினத்தந்தி நாளிதழில் இன்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தெளிவான விரிவான பதிலை அளித்துள்ளார் . அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு:-

நீங்கள் குடும்ப அரசியல் செய்வதாக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி குற்றச்சாட்டுகிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
நான் கலைஞரின் மகன் என்பதும் - உதயநிதி என்னுடைய மகன் என்பது இது ஊரறிந்த உண்மை. ஒரு கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, ஒவ்வொரு உடன்பிறப்பின் குடும்பமும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் முதல் குடும்பமாக நினைக்கிறது. தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மதிப்பிற்குரிய குமரி அனந்தன் அவர்ளின் அன்பு மகள், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் உள்ளிட்ட பலருக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள மோடி, தமிழ்நாடு வந்ததும் ஞாபகமறதி ஏற்பட்டு, குடும்ப அரசியல் என்று குற்றம்சாட்டுகிறார். ஸ்க்ரிப்ட்டை மாற்றட்டும்.

பாரதீய ஜனதா கட்சி, தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கிறது. தி.மு.க. அமைச்சர் ஒவ்வொருவரும் ஊழல் செய்கிறார்கள் என்று பட்டியலிடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?
ஏழரை இலட்சம் கோடி ரூபாய் முறைகேடு என்று பா.ஜ.க. அரசு மீது சி.ஏ.ஜி குற்றம்சாட்டியுள்ளது. ஆயுஷ்மான் எனும் மருத்துவத் திட்டம் முதல், நெடுஞ்சாலைகள் அமைப்பது வரை இந்தியா முழுவதும் ஊழலில் திளைப்பது பா.ஜ.க.தான். அதை மறைக்க, தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைப்பது பா.ஜ.க.வின் வழக்கம். “யோக்கியரு வர்றாரு.. சொம்பை எடுத்து உள்ளே வை” என்கிற கிராமத்து மக்கள் மொழி பா.ஜ.க.வினருக்குத்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது.

கச்சத்தீவு பிரச்சினை தற்போது பாரதீய ஜனதா கட்சி மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளதே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, கலைஞர் கருணாநிதி ஆகியோர்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். கச்சத்தீவு தொடர்பான இந்த புதிய தகவல்கள் தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு முகத்திரையைக் கிழித்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் நாள் பிரதமர் மோடி தலைமையிலான இதே பா.ஜ.க ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, திரு.ஜெய்சங்கர் அவர்கள் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தார். இப்போது அவர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவை நேரு, இந்திராகாந்தி அம்மையார் போன்ற முன்னாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பா.ஜ.க.தான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளைப் பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த விவகாரம் விஸ்வரூபமும் எடுக்கவில்ல. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை. பத்தாண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லைத் தாண்டி வேறு எதுவும் இல்லாத பா.ஜ.க.,வில் பிரதமர், நிதியமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் தொடங்கி கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளைப் பரப்பிக் கதறுகிறார்கள். இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது நாடாளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்திலும், ஒன்றிய அமைச்சர்களுடன் கலைஞர் நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைத்தேன். பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற அந்நாட்டு அரசின் கேபினட் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய அந்நாட்டு அமைச்சர் பந்துல குணவர்த்தனே “கச்சத்தீவு விவகாரம் குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்படவில்லை. ஏனெனியில் அந்தப் பிரச்சினை ஒருபோதும் எழுப்பப்படவில்லை” என்று தெரிவித்திருந்ததை தினத்தந்தி முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதிலிருந்தே கடந்த பத்தாண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். அந்தக் கெட்டிக்காரத்தனம் கூட இல்லாமல் புளுகிய சில மணிநேரங்களிலேயே அம்பலப்பட்டுப் போய்விடுகிறது பா.ஜ.க.


