'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
தமிழகத்தில் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை அறியும், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் 24,000 குடியிருப்புகள், 1.91 கோடி குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பத்தின் கனவு என்ன என்பதை தெரிந்துகொள்ளும் உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புது திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற 50,000 தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை கொடுத்து, எந்தெந்த திட்டங்களில் பயன் பெற்றீர்கள் என கேட்பர். அது மட்டுமல்லாது, அவர்களின் மூன்று கனவுகள் என்ன எனவும் கேட்பர்.
இரண்டு நாட்களுக்கு பின், அவர்களின் வீட்டுக்கு மீண்டும் சென்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, அந்த விபரங்களை மொபைல்போன் செயலியில் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும். இதில் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பெறப்படும். குடும்பத்தின் பொதுவான கனவை கேட்பது மட்டுமல்லாது, 15 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களிடம், நான்கு கருத்துகளை கேட்பார்கள். 30 நாட்களில் வீடு வீடாகச் சென்று தன்னார்வலர்கள் தகவலைப் பெறுவார்கள். மேலும், இது தொடர்பான இணையதளம் 11ம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
வெளிநாடுவாழ் தமிழர்கள் இணையதளத்தில் அவர்களின் கனவை தெரிவிக்கலாம். 2030ல், தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக உயர்த்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த இலக்கை அடைய மக்களின் கருத்துகளை அறியும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.


