நடிகர் சிவாஜி சிலையை திறந்து வைத்தார் முதல்வர்
திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை நிறுவப்படும் என கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை ரவுண்டானா பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 9 அடி வெண்கல சிலை சிவாஜிக்கு நிறுவப்பட்டது. அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அந்த சிலை திறக்கப்படாமலேயே விடப்பட்டது. இந்த நிலையில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எழுப்பிய கேள்விக்கு சிவாஜி சிலை விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்திருந்தார்.

சிவாஜி சிலையை பாலக்கரை பகுதியிலேயே திறப்பதில் சில சிக்கல்கள் இருந்த காரணத்தினால் அந்த சிலையை வேறு இடத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி கண்டோன்மென்ட் அருகே உள்ள வார்னர்ஸ் சாலையில்(சோனா மீனா திரையரங்கம் எதிரே) சிவாஜி சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று பாலக்கரை பகுதியில் இருந்த சிவாஜி சிலை முழுவதுமாக அகற்றப்பட்டது. அந்த சிலை வார்னர்ஸ் சாலையில் நிறுவப்பட்ட நிலையில், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


