வீடியோ கேம் விளையாடும்போது ஏற்பட்ட மோதல்- வீட்டை கொளுத்திய இளைஞர்கள்
சென்னை அயனாவரத்தில் வீடியோ கேம் விளையாடும்போது ஏற்பட்ட மோதலால் வீட்டை கொளுத்திய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம், நியூ ஆவடி சாலை - சோலை மூன்றாவது தெருவில் சாலை ஓரத்தில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசித்து வரும் நிவாஸுக்கும் அப்பு பிரசாத் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், 17 ம் தேதி நள்ளிரவு வேளையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கையில் அதிகாலை 3 மணி அளவில் சோலை நிவாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிலம்பரசன் உள்ளிட்ட சிலர் அப்பு பிரசாத் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.இதனால் அருகில் உள்ள குடிசை வீடுகளில் தீ பரவியுள்ளது. தீ மளமளவென எரிவதை அறிந்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குடியிருப்பு வாசிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனையடுத்து தீ விபத்து தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்தில் 4 வீடுகள் முற்றிலும் எரிந்தது நாசமாகியது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் குடிசை வீடுகளுக்கு கஞ்சா போதையில் தீ வைத்த சோலை நிவாஸ்(25), அவரது நண்பர் சிலம்பரசன்(20) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களது நண்பர்களான கார்த்திக் ராஜா, நவீன் விஜயகுமார் ஆகியோருடன் சென்று குடிசைகளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மூவரும் அயனாவரம் போலீசாரிடம் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கைதான சோலை நிவாஸின் தம்பியும், அவனது நண்பன் சச்சின் என்பவனும் துப்பாக்கியால் சுட்டு விளையாடும் ஆன்லைன் கேம் அடிக்கடி மொபைலில் விளையாடுவது தெரிய வந்துள்ளது. அடிக்கடி எந்த வேலையும் செய்யாமல் ஆன்லைன் கேம் லேயே இருவரும் மூழ்கி இருந்தனர் . இந்த நிலையில் சோலை நிவாஸ் சகோதரர் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போதும் சோலை நிவாஸ் தம்பி , சச்சினுடன் சேர்ந்து திருமண வேலை எதுவும் செய்யாமல் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சோலை நிவாஸ் தன் தம்பியையும் சச்சினையும் அடித்து அனுப்பியுள்ளார்.இதனால் சோலை நிவாஸ் தரப்பினருக்கும், சச்சின் தரப்பினருக்கும் கஞ்சா போதையில் இருந்த காரணத்தினால் மோதல் ஏற்பட்டுள்ளது. கல்யாண வீட்டில் கத்தியுடன் சோலை நிவாஸ் சண்டையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் பயந்து சச்சின் மற்றும் அவரது உறவினர் அப்பு பிரசாத் ஆகியோர் தங்களது வீட்டிற்கு சென்று மறைந்துள்ளனர்.
இதனையடுத்து சோலை நிவாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா போதையில் , அப்பு பிரசாத் வீட்டிற்குச் சென்று குடிசைக்கு தீயை வைத்துள்ளனர். இந்த தீயானது மற்ற வீடுகளுக்கும் பரவி நான்கு குடிசை வீடுகள் நாசமாகியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் கேமில் மூழ்கி விளையாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, இரு பிரிவினர்களுக்கு கஞ்சா போதையில் மோதிக் கொண்டு குடிசைகளுக்கு தீ வைக்கும் வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து குடிசைகளுக்கு தீ வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சோலை நிவாஸ், சிலம்பரசன், கார்த்திக் ராஜா, நவீன் ,விஜயகுமார் ஐந்து பேரையும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.