சென்னையில் மேகவெடிப்பு.. நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழை.. அதிகபட்சமாக 27 செ.மீ மழை..!! எங்கு தெரியுமா?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஆக 31) மற்றும் நாளை (செப்.1) தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் , ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாபோல் செப்.2 முதல் செப்.5ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிவு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ மழையும், விம்கோ நகரில் 23 செ.மீ மழையும், கொரட்டூரில் 18 செ.மீ மற்றும் கத்திவாக்கத்தில் 13 செ.மீ மழையும் பதிவானது. சென்னையில் முதன்முறையாக இந்த ஆண்டில் மேக வெடிப்பு ஏற்பட்டதாகவும், சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் தீவிரமான மேகவெடிப்பு போன்ற மழை பெய்ததாகவும், இந்த ஆண்டின் முதல் தீவிரமான வானிலை நிகழ்வு இது என்றும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சென்னையில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை தீவிரமான மேகவெடிப்பு போன்ற மழை பெய்தது. 2025ம் ஆண்டில் முதல் தீவிர வானிலை நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. இன்று (ஆக 31) இரவும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் நேற்று பெய்ததை விட தீவிரம் குறைவாகவே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


