9 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் - முதலமைச்சர் திறந்து வைத்தார்

 
MK Stalin

தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில்  93 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 84 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவள்ளூர், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 93 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 84 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களையும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், புதுக்காடு கிராமத்தில் 750 மெட்ரிக் டன் கொள்ளளவில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  

மேலும் விவசாயிகளின் விலை பொருளான நெல்லினை அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் விரைந்து கொள்முதல் செய்திட ஏதுவாக, விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ள கிராமங்கள் தோறும் விவசாயிகளின் நலன் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. அதன்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 250 மெட்ரிக் டன் நெல்லினை சேமித்து வைத்திடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 நிலையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 10 நிலையங்கள், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 7 நிலையங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 9 நிலையங்கள், புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 3 நிலையங்கள், கடலூர் மாவட்டத்தில் 2 நிலையங்கள், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 1 நிலையம் என மொத்தம் 10 மாவட்டங்களில் 39 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.