சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

 
mk stalin

பெரியவர் இளையபெருமாள் அவர்களை சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், விதி 110-ன்கீழ் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளிவிளக்காக மட்டுமல்ல; நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாகவும் விளங்கிய அய்யா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் விதி 110-ன்கீழ் அறிவிப்பு. ஒன்றை இம்மாமன்றத்தில் அறிவிப்பதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன்.சமூக சீர்திருத்தத்தின் பெருமைமிகு தலைவர்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தர் ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர்களில் ஒருவர்தான் பெரியவர் எல். இளையபெருமாள் அவர்கள்.  

அத்தகைய சமூகப் போராளியைப் போற்றுவதை திராவிட மாடல் அரசு தனது கடமையாகக் கருதுகிறது.  சமூக இழிவு களையப்பட வேண்டும்; சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும்; அனைத்து சமூகங்களின் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்; சமத்துவ, சுயமரியாதைச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உழைத்த பெரியவர் இளையபெருமாள் அவர்களின் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.