ஏழைகள் ஏ.டி.எம். அட்டையை தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள். அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
The Union Government urged everyone to open bank accounts. Then came demonetisation, pitching #DigitalIndia.
— M.K.Stalin (@mkstalin) March 30, 2025
What followed? Charges on digital transactions, penalties for low balances and now the RBI has allowed banks to charge up to Rs. 23 for ATM withdrawals beyond monthly… https://t.co/Bv0AWMEEa9
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும். ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.