தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் திரு. ராஜேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு. பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் திரு. ராஜேஷ் அவர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். தலைவர் கலைஞர் அவர்களும், திரு. ராஜேஷ் அவர்களது திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம்.
தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுற்றபோது, "தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்" என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் திரு. ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


