சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி

 
stalin stalin

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை, கோட்டூர் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த திருமதி கிருஷ்ணவேணி (வயது 51) க/ப.சக்திவேல் என்பவர் நேற்று (31.10.2024) மாலை அங்கலக்குறிச்சியிலுள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது ஆனைமலை வட்டம், கோட்டூர் அருகில் எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருமதி கிருஷ்ணவேணி அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திருமதி கிருஷ்ணவேணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.