எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ள கூடாத துயரம் இது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 
stalin

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.   
இந்த நிலையில், சட்லெஜ் ஆற்றில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரை சாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது. 

vetri

இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.  எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்  என குறிப்பிட்டுள்ளார்.