பொன்முடியின் அமைச்சர் பதவிக்கும் ஆபத்து? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சர்ச்சை பேச்சை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி, வைணவம் மற்றும் சைவம் குறித்தும் விலைமாதுகள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்டோருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பொன்முடியின் அமைச்சர் பதவி குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.