தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11ம் தேதி ஆலோசனை

 
stalin

தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11ம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் நிலவி வரும் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை செயலகத்தில் வருகிற 11ம் தேதி(செவ்வாய் கிழமை) நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. காவலர்கள் பணிச்சுமையால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும், அவர்களின் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை கட்டாய விடுப்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.