‘இப்படிப்பட்ட பட்ஜெட்டில், திருக்குறள் இடம்பெறாததே நிம்மதி’ - நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கப்பணித்தது குறித்து முதல்வர் விளக்கம்..
டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வணக்கம்.. இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான், ஒன்றிய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட பட்ஜெட்டால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறும் உங்களின் திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறதென்று, உங்கள் எல்லோருக்குமே நன்கு தெரியும்.
நமது அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது. அதனால்தான், திமுக.வுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது. “நாள்தோறும் திட்டங்கள்; மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி.” இதுதான் நமது அரசின் எண்ணம்; இப்படிப்பட்ட நமது எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது.
ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை, நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகின்றேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல; வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். இப்படித்தான் தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. ஏன், மோடி தலைமையிலான பாஜக அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. ஆனால், இந்தப் பெருந்தன்மை ஒன்றிய பாஜக. அரசிடம் இல்லை. இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள்.
அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பாஜக.வைப் பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள். அப்படி புறக்கணித்த மாநிலங்களை , அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான், ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை, 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது.
ஒன்றிய பாஜக அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால் அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பாஜக.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், இந்திய மக்கள் அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை அளிக்கவில்லை! ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால், பாஜக.வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என்று உணர்ந்து, பாஜக திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது!
பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, நமது தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று, சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை! அவ்வளவு ஏன்? ‘தமிழ்நாடு’ என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை! இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள்… இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல… இப்படிப்பட்ட பட்ஜெட்டில், திருக்குறள் இடம்பெறாதது ஒருவகையில் நிம்மதிதான்.
இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது, சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி. 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. “தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள்! ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது.
கேட்டால், 'இது மாநில அரசின் திட்டம்' என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள்... அப்படி என்றால், ரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?
கடந்த ஆண்டு இரண்டு முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது! இதற்கு நிவாரணமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ரூ.276 கோடி நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றிவிட்டார்கள். சரி, இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.
ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு, ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு.
இது எல்லாவற்றையும்விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால்.. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ, மாணவிகளின் கல்வி பாழாகுமே.. அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க. அரசு இருக்கிறது.
அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள்… மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார், ஒன்றிய நிதி அமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நான் கேட்பது என்னவென்றால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான ரூ 20 ஆயிரம் கோடி இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?
கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் ரூ. 17,500 சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு.
இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். சுயநலத்துக்காக நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது; ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக, ஏன்.. இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன்… மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்! இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்.” என்று கூறியுள்ளார்.