துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக ரூ. 18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.11.2024) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முழுவதும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிபவர்கள் சர்வதேச தொழில் சந்தையில் போட்டியிட அவர்களின் உற்பத்தி திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவிற்குள் நுழைய வழி வகை செய்யவும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் சுமார் 100 கோடி ரூபாயில் மெகா கிளஸ்டர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. துல்லிய உற்பத்தி பெருங்குழுமம், திருமுடிவாக்கம் (Precision Engineering Technology Centre) அதன்படி, தானியங்கி வாகனங்கள், இயந்திரங்கள், மின் மற்றும் உபகரணங்களில் பயன்படுத்தப்படும் துல்லிய பொறியியல் மின்னணு பாகங்களை உருவாக்கும் மையமாக (Hub) கருதப்படும் சென்னை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழில்முனைவோர் கூட்டமைப்பினருடன் இணைந்து 47.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 33.33 கோடி ரூபாய் அரசு மானியத்துடன் துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.