உச்சநீதிமன்றத்திற்கு சவால் விடுவதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவரின் வழியே விளக்கம் கேட்டுள்ள ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கால நிர்ணயம் செய்திருப்பதற்கு குடியரசுத் தலைவர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பாஜகவின் தூண்டுதலின் பேரில் ஆளுநர் செயல்பட்டார் என்பது தெள்ளத்தெளிவாகிறது. குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருப்பது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை வலுவிழக்கச் செய்யும் முயற்சி. உச்சநீதிமன்றம் தீர்த்துவைத்த பிரச்னையை மீண்டும் தூண்டுவது கண்டனத்துக்குரியது. பாஜக ஆளாத மாநில அரசுகளை முடக்க நினைக்கிறதா மத்திய அரசு? அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி இந்த பிரச்னையை எதிர்கொள்வோம்.
குடியரசு தலைவரின் செயல் நேரடியாக மாநில அரசின் தன்னாட்சிக்கு சவால் விடுவதாக உள்ளது. பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் இந்த சட்ட போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். தமிழகம் போராடும் - தமிழகம் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.


