10 வருசமா குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள் - முதல்வர் ஸ்டாலின் பேட்டி!!

 
stalin

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. சென்னை நகரில் சில மணிநேரங்களில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் இன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. 

tn

வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்திய இருந்தார். 

இந்நிலையில் ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத நீரிறைக்கும் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " சென்னையில் தேங்கிய நீரை அகற்றும் பணிகள் இன்று மாலைக்குள் நிறைவு பெறும். 10 வருசமா குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை; இதை சரிசெய்யணும்; அடுத்த மழை சீசன் வருவதற்குள் இவைகளை சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கு; நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.



அத்துடன் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்" என்று பதிவிட்டுள்ளார்.