நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, திணிப்பு மற்றும் பேரினவாதத்தை தான் எதிர்க்கிறோம் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மொழி அடிப்படையில் தமிழக முதல்வர் மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். எப்போதெல்லாம் அவர்களின் வாக்கு வங்கி குறைகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியை கையில் எடுக்கிறார்கள் என விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பாஜக அச்சமடைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. பாஜக தலைவர்களின் நேர்காணல்களைப் பாருங்கள். இப்போது மாண்புமிகு யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என குறிப்பிட்டுள்ளார்.