தமிழ் மொழி பேசும்போது இனிமை.. அது நமக்கு பெருமை.. ’செம்மொழி தமிழ் விருது’ வழங்கி ஸ்டாலின் பேச்சு...

 
CM Stalin

தமிழக அரசின் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 கோடி ஒதுக்கி ‘ கலைஞர்  மு. கருணாநிதி செம்மொழி  தமிழாய்வு அறக்கட்டளையை;’ நிறுவினார். அதனைத் தொடர்ந்து தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் தமிழ் ஆய்வில் சிறந்த பங்காற்றிய  அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

stalin award

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்,  கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  இதில் கடந்த 2010 முதல் 2019 வரையில் தமிழில் சிறந்த பங்களிப்பை வழங்கிய 10 அறிஞர்களுக்கு செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  விருதாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும், ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும்  வழங்கி கெளரவித்தார்.

இதில்  பேராசிரியர்கள்  பொன்.கோதண்டராமன், இ.சுந்தரமூர்த்தி, ப.மருதநாயகம்,கு. மோகனராசு, மறைமலை இலக்குவனார், வீ.எஸ்.ராஜம், ராஜன் , உல்ரிக் நிக்லாஸ், கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன் , கு சிவமணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவர்களில் பேராசிரியர்கள் வீ.எஸ்.ராஜம், உல்ரிக் நிக்லாஸ் தவிர மற்றவர்கள் நேரடியாக விருதுகளை பெற்று கொண்டனர்.

ஸ்டாலின்

விருது வழங்கிய பிறகு  உரையாற்றிய முதலமைச்சர் மு.கஸ்டாலின், தமிழுக்கு செம்மொழு அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர் என்று கூறினார். தொடர்ந்து தமிழ் மொழிகளின் சிறப்புகளை பட்டியலிட்ட அவர், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அறிஞர்கள் தமிழ் தொன்மையான மொழி என கூறுவதாகவும், பண்பாட்டின் அடையாளமாக தமிழ் மொழி இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழில் இருந்து தான் பல மொழிகள் உருவாகியிருப்பதாக குறிப்பிட்டார்.

பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் தமிழ் மொழி, பேசும்போது  இனிமையாக  உள்ளது என்றும், தமிழ் மொழி நமக்கு பெருமை தருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகத்தில்  செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.