தமிழகத்தை பாழ்படுத்தும் ஒரு கூட்டம் முதலீட்டாளர் மாநாட்டை கொச்சைப்படுத்துகிறது - முதலமைச்சர் பேச்சு

 
mk stalin

அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் திராவிடமாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்தடைந்தார். இன்று சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவற்ற பல்வேறு திட்ட பணிகளை அவர் திறந்து வைத்தார். சேலத்தில் 2.76 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.96 கோடியில்  மறு சீரமைக்கப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையத்தின் கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும்,  அதன் பேருந்து சேவையை கொடியசைத்தும் தொடக்கி வைத்தார். அதுமட்டுமின்றி ரூ. 19.71 கோடியில் மறு சீரமைக்கப்பட்டுள்ள பெரியார் பேரங்காடி கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்திருக்கிறார். அதேபோன்று ரூ.10.58 கோடி  மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட கோல்ப் மைதானம்,  ரூ.14.97 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட வ.உ.சி மார்க்கெட், ரூ. 33.63 கோடியில் கட்டப்பட்ட நேரு கலையரங்கம் ஆகிய கட்டிடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
 
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-  எண்ணில் அடங்காத திட்டங்களை சேலம் மக்களுக்காக திமுக அரசு செய்துள்ளது. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளோம். நானும் டெல்டாக்காரன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் திராவிடமாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.  சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன. சேலத்தில் புதிய கொலுசு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலத்தில் ரூ.880 கோடி செலவில் ஜவுளி பூங்காவுக்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. சேலம் அம்மாபேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு செய்யப்படுகிறது. உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட காரணத்தால் தான் மின்கட்டணத்தை திருத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம். நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயர் வாங்குவதை விட நம்பர் 1 தமிழ்நாடு எனப் பெயர் வாங்க வேண்டும். தமிழ்நாட்டை பாழ்படுத்தும் ஒரு கூட்டம், முதலீட்டாளர் மாநாட்டை கொச்சைப்படுத்துகிறது. இவ்வாறு கூறினார்.