நான் அழுது புலம்புபவனும் அல்ல, யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல - முதலமைச்சர் பதிலடி!
நான் அழுது புலம்புபவனும் அல்ல, யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். இதேபோல் வெள்ளதடுப்பு பணிகள் உட்பட ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாங்கள் நிதி கேட்பது அழுகை அல்ல, தமிழ்நாடு மக்களின் உரிமை. நான் அழுது புலம்புபவனும் அல்ல.. யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல. 'ஒன்றிய அரசிடம் கை ஏந்தி நிற்க, மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா?' என குஜராத் முதலமைச்சராக நீங்கள் பேசியதை உங்களுக்கே நினைவு படுத்துகிறேன். அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் சேர்த்துட்டு வாங்க, ஒரு கை பார்ப்போம் என கூறினார்.


