"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்..." - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
tn

சர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாளான இன்று முதல்வர் ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

tn

வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் இவர் 1852ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி பிறந்தார். 1920 ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி நகராண்மைத் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தலைவர் (மேயர்) சர்.பிட்டி. தியாகராயர் ஆவார். 1905 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் 5 ஆம் ஜார்ஜ் சென்னை வந்தபோது, நகராண்மை தலைவராக (மாநகராட்சி மேயர்) இருந்த சர். பிட்டி. தியாகராயர், இளவரசரை வெள்ளுடை அணிந்து வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாக வெள்ளுடை வேந்தர் என்ற சிறப்பு பெயருக்கு இவர் சொந்தக்காரர் ஆனார் .சர்.பிட்டி. தியாகராயர் தமது சொந்தப் பணத்தில் பல பள்ளிகளையும்,  கல்லூரிகளையும் நிறுவினார். சென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் நிறுவியதே. சென்னை மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகங்களை நிறுவப் பெரும் தொண்டாற்றினார். 
 


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "#DravidianModel எனும் மக்கள் நல நிர்வாகத்திற்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சியின் முதன்மையான தலைவரும், சென்னை மாநகராட்சியின் தலைவராகப் பணியாற்றியவரும், மாநகராட்சிப் பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திக் கல்விச் சுடரை ஏற்றியவருமான 'வெள்ளுடை வேந்தர்' சர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் இன்று!  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைச் சென்னைவாசிகள் எனக்கு வழங்கியபோது, ரிப்பன் கட்டடத்தின் முகப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திப் பணியினைத் தொடங்கியதை நினைவில் கொள்கிறேன்.தீரமிக்க திராவிடத் தலைவர் தியாகராயர் புகழ் போற்றி, அனைவருக்கும் அனைத்தும் என்ற இலட்சியத்துடன் மக்கள் நலப் பணியினைத் தொடர்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.