மக்களின் துயர் நீக்க என்றும் எனது பயணம் தொடரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த அதிகனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில், இன்று காலை 10.00 மணிக்கு, மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிக்ஜாம்  புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.