அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் திறப்பு விழா - முதலமைச்சர் பெருமிதம்

 
mk stalin

அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைக்கிறார்.  கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.   அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்க வருமாறு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது இதன் காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.


இந்தநிலையில், திறப்பு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' என பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.