தினந்தோறும் திட்டங்கள் தீட்டி ஊர்தோறும் வளர்ச்சியை கண்டு வருகிறோம் - முதலமைச்சர் டுவீட்!

 
mk stalin

திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றி தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஈடில்லா ஆட்சி ,ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரையும் வெளியிட்டார். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  

இந்த நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.  தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.