முதல்வர் உடல்நிலை - வதந்தி பரப்பினால் நடவடிக்கை
முதல்வர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு , நேற்று முன்தினம் (ஜூலை 21) காலை நடைபயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நண்பகலில் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மருத்துவமனையிலேயே இருந்து வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் முதலமச்சர் மு.க.ஸ்டாலின் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகிறார் என்றெல்லாம் வதந்தி பரவியது. அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை எனக் கூறியுள்ள மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, முதல்வர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


