அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வரும் 12ஆம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களில் நீர் தேங்கி சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது சாலைகளிலும் குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையின் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க ஸ்டாலின் மூன்றாம் நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குளத்தூரில் ஆய்வு செய்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். உணவின் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை உண்டு பார்த்த பிறகே அவர் மக்களுக்கு வழங்கினார். மக்களுக்கு தானே வழங்குகிறோம் என்று அலட்சியமாக இல்லாமல் உணவை முதல்வர் சோதனை செய்து பார்த்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில், சென்னை போரூர் அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார். சென்னை மாநகராட்சியின் நிவாரண முகாம்களில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.