மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை வழங்கினார் முதல்வர்!

 
mariyappan

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு வேலை வழங்கினார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 2020 போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி தமிழகத்திற்கே பெருமை சேர்த்தார். தமிழக மக்கள் அவரைக் கொண்டாடினர்.

mariyappan

'இந்த முறை தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது சிறிது வருத்தம் அளிக்கிறது. மழை பெய்ததால் தங்கம் வெல்ல முடியவில்லை. அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று மாரியப்பன் தெரிவித்திருந்தார். மேலும், தமிழக அரசு தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். போட்டிகள் முடிந்த பிறகு சென்னை திரும்பிய மாரியப்பன் தங்கவேலு செப்டம்பர் 6ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அரசு வேலைக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவின் கோரிக்கையை முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். குரூப்-1 பிரிவில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தலைமை செயலகத்தில் வழங்கியுள்ளார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அரசு வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மாரியப்பன் தங்கவேலு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.