மகளிர் விடுதிகள் கட்டடங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

ரூ.13.07 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடங்கள் மற்றும் ரூ.3.42 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 7 மகளிர் விடுதிக் கட்டடங்களை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.7.2023) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் 13 கோடியே 7 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடங்கள் மற்றும் சென்னை அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 3 கோடியே 42 இலட்சம் 78 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

tn
பணிபுரியும் இடங்களில் பெண்களின் பங்களிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் கிராமங்கள், சிறு நகரங்களிலிருந்து பெருநகரங்களுக்கு பணிநிமித்தம் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்திற்கு அருகில் தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதிகள் கிடைப்பது அவசியத் தேவையாக உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் தேவைகளை உணர்ந்த தமிழ்நாடு அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து வருகிறது.

stalin

பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கிட "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்" தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு, புதிய விடுதிகளை கட்டுதல், பழைய விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் 7 கோடியே 44 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளியில் 5 கோடியே 65 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 13 கோடியே 7 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் 226 மகளிர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். மேலும், சென்னை அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 3 கோடியே 42 இலட்சம் 78 ஆயிரம் ரூபாய் செலவில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் இத்தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர்  www.tnwwhcl.in என்ற விண்ணப்பிக்கலாம்.