வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம் சிலைகள் திறப்பு

 
ttn

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வ.உ.சிதம்பரனார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியோருக்கு ரூ.66 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து, உத்தமத் தியாகி ஈரோடு ஈஸ்வரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப.சுப்பராயன் ஆகியோருக்கு ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

gn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கும், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கும், 66 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் உத்தமத் தியாகி ஈரோடு ஈஸ்வரன் அவர்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப.சுப்பராயன் அவர்களுக்கும் 5 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னம் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

stalin

அந்த வகையில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 3.9.2021 அன்று சட்டப்பேரவையில், தனது வாழ்நாளின் முக்கிய நாட்களைக் கோவைச் சிறையில் கழித்த வ.உ. சிதம்பரனார் அவர்களுடைய முழு உருவச் சிலை கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்படும் என்றும், 2021– 22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், பெண் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், தேவதாசி ஒழிப்பு இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் முன்னோடியுமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு மயிலாடுதுறையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்றும், இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு புதுக்கோட்டையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் 40 இலட்சம் ரூபாய் செலவிலும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு மயிலாடுதுறையில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் 16 இலட்சம் ரூபாய் செலவிலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

stalin

2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், கொங்கு மண்டலத்தில் சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் வசதி பெறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி பாசனத் திட்டம் கொண்டுவர முக்கியக் காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு தொகுதியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சுமார் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த உத்தமத் தியாகி திரு. ஈஸ்வரன் அவர்களது நினைவைப் போற்றும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்றும், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவருமான, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களது சேவைகளை நினைவுகூரும் வகையில், அன்னாருக்கு நாமக்கல் நகரில் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உத்தமத் தியாகி திரு. ஈஸ்வரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டம், பவானி சாகர், முடுக்கன்துறையில் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களுக்கு நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டாரம், நவணிதோட்டக்கூர்பட்டியில் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.