"திமுக இமாலய வெற்றி; வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி" - முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்!

 
cm stalin

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. நேற்று முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 138 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது. அதே போல 1,380 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் இதுவரை திமுக 900க்கும் அதிகமான இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. 

cm stalin

இந்த நிலையில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. மக்களின் அங்கீகாரமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்தது. கொரோனாவை வென்றோம். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்தோம். அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை வார்த்தைகளால் சொல்லமுடியாது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தப்பிக்க பார்க்கவில்லை.

கொடுத்த வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இந்த உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் வெற்றி. கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றுகிறது என்று நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். நீங்கள் கொடுத்த இந்த வெற்றி எங்களை மேலும் உழைக்க தூண்டுகிறது. ஐந்து ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதங்களில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே நாங்கள் என்பதை உங்களது உழைப்பால் நிரூபித்துக் காட்டி விட்டீர்கள். தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். திமுக அரசு நிறைவேற்றும் திட்டப்பணிகளை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு உள்ளது. கோட்டையின் வாசலில் நின்று உத்தரவிட்டாலும் அதனை குக்கிராமத்தில் வாழும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே. அதை நினைத்து உழைக்க வேண்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம். மக்களை காப்போம்  குறிப்பிட்டுள்ளார்.