'மக்களுடன் முதல்வர்' திட்டம் டிசம்பர் 18-ம் தேதி தொடக்கம்

 
mkstalin

அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும்  சென்று சேர்ந்திட வழிவகுக்கும் "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவையில் தொடங்கிவைக்க உள்ளார்.

M K Stalin: DMK president M K Stalin hurls corruption charges at transport  minister | Trichy News - Times of India

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஏழையெளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களைத் தீட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், தாம் ஆட்சிப் பொறுபேற்றவுடன், தமது தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற துறையை உருவாக்கி, அனைத்து மனுக்களுக்கும் 100 நாட்களில் தீர்வு கண்டு வரலாற்று சாதனை படைத்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் கோரிக்கைகளைத் திறம்பட கையாண்டு, அவற்றை நிறைவேற்றிட ஏதுவாக, “முதல்வரின் முகவரித் துறை” என்ற தனித்துறையை உருவாக்க ஆணையிட்டார். இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றிற்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் , நேரடியாக மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற முன்னெடுப்பின் கீழ், மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, கள ஆய்வுகள் மேற்கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொது மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பின் நீட்சியாக, அரசுத்துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 18-12-2023 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

Stalin Urges couple to restrict number of children - The Daily Guardian

“மக்களுடன் முதல்வர்“’ என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வரும் டிச. 18-ஆம் தேதி முதல் 06-01-2024 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து 31-1-2024 வரை “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும்.

MK Stalin Refutes PM Modi's Allegations That Tamil Nadu Temples Being  'Encroached' By State

இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். முதலமைச்சர் கோயம்புத்தூரில் இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் அதே நேரத்தில், அமைச்சர் பெருமக்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும் இம்முகாம்களை தொடங்கி வைக்கவுள்ளனர்.

இம்முகாம்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள தெரிவித்தும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.